Dec 27, 2012

நடைபாதை கடைகளுக்கு கடிவாளம்! நடைமுறைக்கு வருமா விதிமுறைகள்?

கோவை : தெருக்களில் உணவு விற்பனை செய்வோருக்கான தூய்மை மற்றும் சுகாதார தேவைகள் குறித்து, புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள், தற்போது நடைமுறையில் இல்லை. கோவை நகரில் உள்ள பெரும்பாலான தள்ளுவண்டி கடைகள், சாக்கடை ஓரத்தில் ஈ மொய்க்கும் இடத்தில் தான் உள்ளன.
கோவை மாநகர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன. மாலை 5:00 மணிக்கு துவங்கும் வர்த்தகம், இரவு 10 மணி வரை நடக்கிறது.
சாதாரண டிபன் உணவுகள், பஜ்ஜி, போண்டா, வடை முதல் வடமாநில உணவு வகைகள், பாஸ்ட் புட் உணவுகள் என வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சாலையோரத்தில் இயங்கும் இந்த நடைபாதை கடைகளில், அடிப்படை சுகாதாரம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
திறந்தவெளி சாக்கடை ஓடும் துர்நாற்ற சூழலில், பல தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கெட்டில் நிரப்பப்பட்ட தண்ணீரில், பாத்திரங்களை மீண்டும் மீண்டும் மூழ்க வைத்து, சுத்தம் செய்யப்படுகிறது.
சில கடைகளில் மறுசுழற்சி அடிப்படையில், சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.
பல கடைகளும் சுகாதார நிலையில் பின்தங்கி இருப்பதால், சுத்தமாகவும், சுகாதாரமாகும் செயல்படும் கடைகள் மீதும் அதிருப்தி ஏற்படுகிறது.
ஆனால், அவசரப் பசியை போக்குவதால், எத்தகைய சுகாதார சூழலிலும் வியாபாரம் "களை' கட்டி வருவது தான் ஆச்சரியத்துக்குரிய விஷயம்.
சிறு வணிகர்கள் மற்றும் தெருக்களில் உணவு விற்பனை செய்வோருக்கான தூய்மை மற்றும் சுகாதார தேவைகள் குறித்து, "உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம்' கூறுவதென்ன?
* குப்பை, கழிவுநீர், கழிவறை, திறந்த சாக்கடைகள், தெருவிலங்குகள் போன்ற அசுத்தத்துக்கு மூலக்காரணமான இடங்களுக்கு தொலைவில் கடைகள் இருக்க வேண்டும்.
* உணவுப் பொருட்கள் அல்லது உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டிகளின் மேற்பரப்பு, சுத்தமாக இருக்க வேண்டும்; எளிதில் சுத்தம் செய்யத்தக்க வகையில், எவர்சில்வர் போன்ற நீர்உறிஞ்சாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
* கழிவுப்பொருட்கள் மூடியுடனான பாத்திரத்தில் சேகரிக்கப்பட வேண்டும். உணவு வியாபாரம் முடிந்த உடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து, பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைக்க வேண்டும்.
* சமைப்பதற்கும், தூய்மை செய்வதற்கும் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். குடிநீரை மூடியுடன் கொள்கலத்தில், மாசு படியாதவாறு பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். பாத்திரங்களை பயன்பாட்டுக்குப் பின், ஒவ்வொரு முறையும், சோப்புப் பவுடரால் நன்கு தேய்த்து, நீரில் சுத்தம் செய்ய வேண்டும்; பாத்திரங்களை துடைக்க சுத்தமான துணிகளை பயன்
படுத்த வேண்டும்.
* சமையல், உணவை கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர் கையுறைகள், மேலங்கிகள் அணிய வேண்டும். பணியின்போது தலைக்கவசம், வாய்மூடி அணிய வேண்டும்.
* விற்பனை கடைகள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறின்றி, உள்ளாட்சி அமைப்பு அங்கீகரித்த இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.