Jul 22, 2014

பாலக்கோட்டில் அனுமதியின்றி இயங்கிய தக்காளி பழ ரச நிறுவனத்திற்கு ‘சீல்’ 2 ஆயிரம் லிட்டர் கீழே கொட்டி அழிப்பு





பாலக்கோடு, 
பாலக்கோட்டில் அனுமதியின்றி தக்காளி பழ ரசம் தயாரித்த நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து 2 ஆயிரம் லிட்டர் பழ ரசங்களை கீழே கொட்டி அழித்தனர்.
ரகசிய தகவல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீட்டில் அனுமதியின்றி தக்காளி பழ ரசம் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கலெக்டர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் சந்திரன், சேகர், சிவமணி, நாகராஜ், நந்தகோபால் உள்ளிட்டோர் நேற்று பாலக்கோட்டிற்கு நேரில் சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது உஸ்மான் (வயது 30) என்பவர் வீட்டில் அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற முறையில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி போலி நிறுவன முகவரியில் தக்காளி பழ ரசம் மற்றும் மிளகாய் கூழ் தயாரிப்பது தெரியவந்தது.
2 ஆயிரம் லிட்டர் அழிப்பு
அங்கு பாட்டில்களில் அடைத்து அட்டை பெட்டிகளில் விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த 2 ஆயிரம் லிட்டர் போலி தக்காளி மற்றும் மிளகாய் கூழ் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அலுவலர்கள் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் ரசாயனம் கலந்த போலி தக்காளி பழ ரசம் மாதிரியை கோவையில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 
மேலும் போலியாக இயங்கிய நிறுவனத்தை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக யாரேனும் போலி முகவரி மற்றும் முறையான அனுமதி பெறாமல் இதுபோன்று பழ ரசம் மற்றும் கூழ் தயாரிப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அலுவலர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment