Jan 21, 2014

உணவு வியாபார நிறுவனங்கள் பதிவு செய்ய பிப்.4 கடைசி நாள்

மதுரை, ஜன. 21:
மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் வரும் பிப்.4ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,� மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, டீக்கடை, சிற்றுண்டி நிலையம், தெருவோர கடைகள், தள்ளுவண்டி, ஓட்டல்கள், உணவு பொருள் சேமித்து வைப்பவர்கள், மொத்த வியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும். 
மேலும் சமையல் பாத்திர செட் வைத்திருப்பவர்கள், கோயில் மற்றும் பொது இடங்களில் அன்னதானம் வழங்குபவர்கள், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி, பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள் உள்பட அனைவரும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி தங்களது வணிகத்தை பதிவு செய்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். 
பதிவு, உரிமம் பெறுபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் www.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் ரேஷன் கார்டு நகல், வங்கியில் ரூ.100 செலுத்தியதற்கான உண்மை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தொழில் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட நியமன அலுவலர் அல்லது வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் வழங்க வேண்டும். ஏற்கனவே பதிவு உரிமம் பெற்றவர்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு பிப்.4 ஆகும். 
காலக்கெடு நீட்டிப்பு இல்லை. தவறுபவர்கள் அபராத தொகையுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0452&2640036, செல்போன் 98423 03625 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவலை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருள் வணிகர் பெயரை பதிவு செய்துகொள்ள வலியுறுத்தல்

பாடாலூர், ஜன. 21: 
ஆலத்தூர் வட்டாரத்தில் உணவுப்பொருள் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் தங்கள் பெயர் களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் பிப்ரவரி 4ம் தேதிக் குள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 
தங்கள் வியாபார நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் ரேஷன் கார்டு மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வியாபா ரம் செய்யும் நிறுவனங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி அதற் கான உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதனை பதிவு செய்து கொள்ள ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், கொளக்காநத்தம், கூத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தையோ அல�லது ஆலத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரவியை 99449&15341 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்

அங்கன்வாடி மையங்களுக்கு காலாவதி உப்பு பாக்கெட்கள் சப்ளை ஊராட்சி துணைத் தலைவர் புகார்

பெரம்பலூர், ஜன. 21:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 2010ல் தயாரிக்கப்பட்ட காலாவதியான உப்பு பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாக்கெட் பழசு; உள்ளிருக்கும் உப்பு புதுசு என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் உணவில் சேர்க்க பயன்படுத்தப்படும் உப்பு பாக்கெட்டுகள் அந்தந்த மையங்களுக்கு அரசின் மூலம் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன. 
இந்நிலையில், நேற்று ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழக்கமாக வழங்கப்பட்டுவரும் உப்பு பாக்கெட்டை பார்வையிட்ட ஊராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், அதில் உப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்தார். அந்த உப்பு பாக்கெட்கள் 2010ல் தயாரிக்கப்பட்டு காலாவதியானவை என தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். 
இதையடுத்து, காலாவதியான தேதிகளை கொண்ட அந்த உப்பு பாக்கெட்களை எடுத்துக் கொண்டு கிராம மக்களையும் உடன் அழைத்துக்கொண்டு பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தார். அங்கு நடைபெற்று கொண்டிருந்த குறை தீர் நாள் கூட்டத்திற்கு சென்ற அவர், எந்தப் பொருளும் கெடாமல் இருப்பதற்கு தானே உப்பு போடுவார்கள்; ஆனால் கெட்டுப்போன உப்பையே எங்கள் பகுதிக்கு உணவாகத் தருகிறார்களே என்று புகார் தெரிவித்தார். 
மேலும், அவர் கொண்டு வந்த உப்பு பாக்கெட்டில் 2010 பிப்ரவரியில் தயாரிக்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. இதன் படி, அதன் காலாவதி தேதி 2013 மார்ச் மாதமாகும். எனவே, காலாவதியாகி 22 மாதங்கள் கழித்து விநியோகிக்கப்படும் இந்த உப்பு பாக்கெட்களை சப்ளை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே விநியோகித்த உப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய உப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் குறை தீர் நாள் கூட்ட அரங்கமே அதிர்ச்சியால் ஸ்தம்பித்தது. 
பாக்கெட் பழசு;  உள்ளிருப்பது புதுசு 
ஊராட்சி துணைத் தலைவரின் புகாருக்கு விளக்கம் அளித்து கலெக்டர் தரேஸ் அஹமது கூறியதாவது: 
இந்த விவகாரம் ஏற்கனவே எங்கள் காதுக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த போது உப்பு அடைக்கப்பட்டுள்ள பாக்கெட் மட்டுமே பழசு; ஆனால் அதன் உள்ளே உள்ள உப்பு புதுசு. அந்த உப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்றார். இதே கருத்தை டிஆர்ஓ சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சித் துணைத் தலைவருடன் வந்திருந்த நக்கசேலம் கிராம மக்களுக்கும் விரிவாக விளக்கிக் கூறினர். இதனால் காலாவதியான உப்பு பாக்கெட் விஷயத்தில் பலருக்கும் பாதிப்பு ஏற்படுமே என நினைத்துவந்த விஷயமே உப்பு சப்பில்லாமல் போய்விட்டதே என நினைத்து புகார் கொடுக்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

கொளத்தூரில் போலி டீத்தூள் பறிமுதல்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உணவுப் பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்வில் 28 கிலோ போலி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், மாரியப்பன், சிவானந்தம் ஆகியோர் திங்கள்கிழமை தேநீர்க் கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்தினர். 
அப்போது, தேநீர்க் கடைகளில் இருந்து 28 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்டிக் கடைகள், பேக்கரிகளில் இருந்து காலாவதியான ரொட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மளிகைக் கடைகளில் 500 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.