Oct 15, 2016

பொதுமக்களே உஷார்... 4ம் கட்ட அழுக்கு மாவில் ஜவ்வரிசி உற்பத்தி

சேலம்: நான்காம் கட்ட அழுக்கு மாவில் இருந்து, தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்பதால், முதல் தர மாவில் உற்பத்தி செய்த ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, சேகோ மில் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட சேகோ மில்களில், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கொல்லிமலை, பரமத்தி வேலூர், தாராபுரம், அரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, சேகோ மில்களுக்கு, மரவள்ளி கிழங்கு வருகிறது. பல சேகோ மில்களில், விதிமீறி, தோலை நீக்காமல், கிழங்கை அரைத்தும், அழுக்கு மாவில் இருந்தும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சேகோ மில் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: அதிகாரிகள் கெடுபிடியால், 80 சத மில்களில், முதல் தர ஸ்டார்ச் மாவில் இருந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சத மில்களில், கிழங்கு தோலை நீக்காமல் அரைத்தும், 3ம் கட்ட ஈர மாவு, 4ம் கட்ட அழுக்கு மாவில் இருந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்றனர். ஆறு மூட்டை தோல் நீக்கிய கிழங்கில் இருந்து, ஒரு மூட்டை ஜவ்வரிசி கிடைக்கும். ஐந்து மூட்டை தோல் நீக்காத கிழங்கில் இருந்து, ஒரு மூட்டை ஜவ்வரிசி கிடைக்கும். தோல் நீக்காமல் அரைத்தால், ஒரு மூட்டை அரிசிக்கு, 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். சிலர், அதிகாரிகளுக்கு பயந்து தோலை நீக்கி அரைக்கின்றனர். பின், நீக்கப்பட்ட தோலை அரைத்து, ஸ்டார்ச் மாவில் கலந்துவிடுகின்றனர்.
தற்போது, 90 கிலோ கொண்ட, தரமான மூட்டை ஜவ்வரிசி, 4,000 ரூபாய். தோல் நீக்காத கிழங்கில் இருந்து, உற்பத்தி செய்த ஜவ்வரிசி 3,000க்கு விற்பனைக்கு வருகிறது. அதனால், தரமான ஜவ்வரிசி, 3,200 ரூபாய்க்கு கேட்பதால், தோலை நீக்கி, ஜவ்வரிசி உற்பத்தி செய்த மில் உரிமையாளர்களுக்கு, நஷ்டம் ஏற்படுகிறது. ஸ்டார்ச் மாவை ஈரமாக விற்கக்கூடாது என்பது விதி. ஆனால், அதைமீறி, பெரிய மில்களில் ஜவ்வரிசி உற்பத்தி செய்த பின் கிடைக்கும், 3, 4ம் கட்ட அழுக்கு மாவை மற்ற மில்களுக்கு விற்கின்றனர். அந்த அழுக்கு மாவில், தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்றனர். உலர்ந்த மாவை தண்ணீரில் ஊற வைத்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அழுக்கு மாவில், தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்பதால், முதல் தர மாவில் இருந்து, உற்பத்தி செய்த ஜவ்வரிசிக்கு, உரிய விலை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: ஜவ்வரிசி உற்பத்திக்கு, தோலை நீக்கிதான் செய்ய வேண்டும். முதல் தர ஸ்டார்ச் மாவில் இருந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும். ஈர மாவு விற்கக்கூடாது என, தடை உள்ளது. அழுக்கு மாவில், உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியை வெண்மையாக்க, நிறைய கெமிக்கல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக, ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment