Mar 22, 2017

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 720 கிலோ மாம்பழம் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ராமநாதபுரத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 
மாம்பழங்கள்
தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் ராமநாதபுரத்தில் மாம்பழங்கள் வரதொடங்கி உள்ளன. மாம்பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கம் நோக்கத்தில் மாங்காயாக இருக்கும் போதே சிலர் அதனை பறித்து கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜான்பீட்டர், கருணாநிதி ஆகியோர் ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மாம்பழங்கள் பறிமுதல்
ராமநாதபுரம் வடக்குத்தெரு பகுதியில் மாம்பழ குடோன் வைத்து மொத்த வியாபாரம் செய்து வரும் கண்ணன் என்பவரின் குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அங்கிருந்த மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மதுரையில் இருந்து வாங்கிவரப்பட்ட மாங்காய்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து மாவட்டம் முழுவதும் அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடோனில் இருந்த 720 கிலோ மாம்பழங்களை கைப்பற்றிய அதிகாரிகள் நகராட்சி உரக்கிடங்கில் உரிய முறைப்படி கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
வயிற்றுபோக்கு
இதுகுறித்த அதிகாரியான டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறியதாவது:–
பொதுவாக மாம்பழங்கள் மாமரங்களில் இயற்கையாக உற்பத்தியாகும் எத்திலின் மூலம் பழுத்து விடும். ஆனால், மாங்காய்களை பறித்து வந்து செயற்கையாக கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த முறையால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிற்றில் புண், பசியின்மை, வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும். கேன்சர் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
இதன்காரணமாக, கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் அதிக மஞ்சள் நிறத்தில் மினுமினுப்பாக இருப்பதோடு, வழக்கத்தை விட சற்று பெரியதாக இருக்கும். மாம்பழ தோள் பகுதியில் கரும்புள்ளிகள் இருக்கும். மாம்பழத்தினை தொட்டு பார்த்தால் வழக்கத்தைவிட சற்று வெப்பமாக இருப்பதை உணர முடியும்.
வியாபாரிகளுக்கு வேண்டுகோள்
இந்த வகை மாம்பழங்கள் பார்ப்பதற்கு பழுத்துள்ளது போன்று இருந்தாலும், அதன் சுவை இனிக்காமல் காய் போன்றே இருக்கும். கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பது குற்றமாகும்.
அதற்கு பதிலாக மாங்காய்களை பப்பாளி, வாழைப்பழம் முதலியவற்றுடன் கலந்து வைத்தால் உடனடியாக இயற்கை முறையில் பழுத்துவிடும். ஏனெனில் வாழைப்பழம், பப்பாளி முதலியவற்றில் இயற்கையாகவே எத்திலின் சுரப்பு அதிகம் உள்ளது. எனவே, மாங்காய்களை பழுக்க வைக்க இதுபோன்ற நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment