May 25, 2017

தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக புகார்: சென்டிரல் அருகே 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல்

சென்னை சென்டிரல் அருகே தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்தது. இதையடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறைக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை (சென்னை மாவட்ட) நியமன அதிகாரி கதிரவன் உத்தரவிட்டார். 
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சதாசிவம், சிவசங்கரன், லோகநாதன், ஜெபராஜன், சுந்தரராஜன், ராஜபாண்டி ஆகியோர் கொண்ட குழு நேற்று மாலை அல்லிகுளம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டது. 
அப்போது அங்குள்ள கடைகளில் தரமற்ற எண்ணெய் மற்றும் மசாலாக்கள் கலந்து மீன், கோழி, ஆடு மற்றும் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. கெட்டுப்போன இறைச்சியும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 
500 கிலோ இறைச்சி
பின்னர், சென்னை அரசு பொது ஆஸ்பத்திரி முன்பு இருக்கும் கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் தரத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காலாவதியான குடிநீர் கேன்கள், தரமற்ற உணவு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 500 கிலோ அளவில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய் அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டன.

No comments:

Post a Comment