Jul 19, 2017

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் அன்னதானம் :ஸ்ரீவி.,யில் கலந்தாய்வு கூட்டத்தில் ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்துார்;''ஆண்டாள்கோயில் ஆடிப்பூர தோரோட்டத்தில் அன்னதானம், நீர், மோர் போன்றவை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின் தான் வழங்கவேண்டும்'' என அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முத்துக்குமரன் டி.ஆர்.ஓ., பேசினார். ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தக்கார் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராமராஜா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரன் பேசியதாவது: தேரோட்ட தினத்தன்று பல்வேறு பொதுஅமைப்புகளால் வழங்கப்படும் அன்னதானம்,தண்ணீர், மோர், நீர் ஆகாரங்களை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் வழங்க அனுமதிக்கப்படும். கோயில் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார், என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றவேண்டும். தேரில் ஒரு அர்ச்சகர் உட்பட 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். சிவகாசி, சாத்துார், வெம்பகோட்டை, விருதுநகர் ஊர்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்களை அழைக்கவேண்டாம். கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, தண்ணீர் வசதிகளை நகராட்சி செய்யவேண்டும். சிறப்பு பஸ்களை அரசுபோக்குவரத்து கழகம் இயக்கவேண்டும்.
பொதுநல அமைப்புகள் மாடவீதிகள், ரதவீதிகளில் தண்ணீர் பந்தல்கள் அமைக்ககூடாது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத பகுதிகளில் தண்ணீர் வழங்கலாம். நான்கு ரத வீதிகளில் கட்டட பொருட்கள் ரோட்டில் கொட்டக்கூடாது. பொதுமக்கள் நலனை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கு இடமின்றி போலீஸ், வருவாய், நகராட்சி துறைகள் செயல்படவேண்டும். ரதவீதிகளில் போடப்படும் இரும்பு பிளேட்டுகள் தேர் கடந்தவுடன் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். புதுபட்டி விலக்கிலிருந்து மம்சாபுரம் வரையுள்ள ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்படும். தினமும் அனைத்து அரசுத்துறைகளும் இணைந்து ரத வீதிகளில் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும், என்றார்.
சிவகாசி சப்-கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் சரஸ்வதி, சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், நகராட்சி ஆணையாளர் முகமதுமுகைதீன், தீயணைப்பு அலுவலர் பழனிசாமி, அரசு மருத்துவர் காளிராஜ், புலவர் பாலகிருஷ்ணன், ராம்கோ நிறுவன அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

1 comment: